மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் கொடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதனை தமிழக அரசு ரூபாய் 20 லட்சமாக அறிவித்து வழங்க வேண்டும். ஒரத்தநாடு அருகே முனியாண்டி என்பவர் தனது தென்னை மரங்கள் அனைத்தும் அழிந்திருப்பதை பார்த்து பார்த்த இடத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். இரண்டு மின்சார ஊழியர்கள் இறந்துள்ளார். இந்த கோர மரணம் அந்த குடும்பங்களை தவிக்கவிட்டுவிட்டன.
சமீபத்தில் வார்தா புயல், ஒக்கி புயல், தானே புயல் இப்போது கஜா புயல். வார்தா புயல், ஒக்கி புயல், தானே புயல் ஆகிய இந்த மூன்று புயல்களில் தமிழக அரசு வைத்த நிதி கோரிக்கையில் 4 சதவீதம்தான் நரேந்திர மோடி அரசு தந்திருக்கிறது. 100 சதவீதம் கேட்டதில் 4 சதவீதம் தந்தால் நாங்கள் என்ன தமிழ்நாட்டுக்காரர்கள் உங்களிடம் வேலைப்பார்க்கிற கூலிக்காரர்களா? கூலிக்காரர்களுக்கே உரிய நிதி கொடுக்க வேண்டும் என்று உலகத்தில் தொழிலாளர் சட்டம் சொல்லுகிறது. எடுத்த எடுப்பிலேயே மத்திய அரசின் போக்கிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.