இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தூரில் திமுக வேட்பாளர் சீனிவாசனையும், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
“ஒரே மதம், ஒரே மொழி, இந்துத்வா என்ற கொடூரமான திட்டத்தின் அடிப்படையில், இந்தியாவின் பிரதமராக மோடி செயல்பட்டு வருகிறார். மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது மத்திய அரசுதான். அதனால், சோழவளநாடு பஞ்சப் பிரதேசமாவதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? இளம்பெண்கள் நம் நாட்டில் பாதுகாப்பாக வாழ முடியவில்லை. இந்த ஆண்டு மாற்றங்களின் ஆண்டு. இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நிகழும். மத்தியிலும் மோடி ஆட்சியைத் தூக்கி எறிந்து, ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையைக் காக்கின்ற அரசு அமையும். மத்தியில் அமைக்கும் ஆட்சியில் திமுக பங்கேற்கும். பட்டாசு, தீப்பெட்டி தொழில், விவசாயத்தைப் பாதுகாத்து வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவோம்.” என்றார்.
ராஜபாளையத்தில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வைகோ
“விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைத்ததா? இல்லை. ஆனால், எஸ்ஸார் கம்பெனியும் அம்பானி கம்பெனியும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் காவல்துறையும் ஸ்டெர்லைட்டும் கூலிப்படையாக ஏவப்பட்டு, 13 பேரை திட்டமிட்டுச் சுட்டுச் சாய்த்தது இந்த எடப்பாடி அரசு என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
“எதேச்சாதிகாரமா? மக்களாட்சியா? ஜனநாயகமா? பாசிசமா? இதுதான் இந்தத் தேர்தலில் நம்முன் எழுந்திருக்கும் கேள்வி. நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ரத்தக்களறிகள் உருவாகப்போகிற, நாம் நினைத்தாலே நெஞ்சை நடுங்க வைக்கப்போகிற இந்தியாவா? என்பதைத் தீர்மானிக்கப்போகிற தேர்தல் இது. இந்த நாட்டினுடைய மதச்சார்பின்மை காப்பாற்றப்பட்டால்தான், ஒற்றுமை காப்பாற்றப்படும்.” என்று கர்ஜித்தார்.
வைகோ பிரச்சாரம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது.