வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலிருந்து காலை 07.10 மணிக்கு புறப்பட்டு 07.15 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு பிற்பகல் 02.25 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். அதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து நண்பகல் 01.50 மணிக்கு புறப்பட்டு சுமார் 07.25 மணி நேரப் பயணத்தைக் கடந்து இரவு 09.15 மணிக்கு மதுரையைச் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை முதல் மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12636) காலை 7.10 மணிக்குப் பதிலாக 6.40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2:10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். அதே சமயம் சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12635) வழக்கம் போல பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்குப் பதிலாக 9.30 மணிக்கு மதுரை சென்றடையும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு ரயில்களின் கால அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளன.
இந்த சூழலில் மதுரையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் முன்னதாகவே புறப்பட்டாலும் பிற்பகல் 02.10 மணிக்கு தான் சென்னை எழும்பூரை சென்றடைகிறது. எதிர்த் திசையிலும் நேர மாற்றத்தின் காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக மதுரையைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரயில் பயணிகள் பலரும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை - நெல்லை இடையே கடந்த 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் மக்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தைக் குறைக்கும் முயற்சி நடைபெறுவதாக ரயில் பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.