அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு நாளை (11/07/2022) ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளைய தினம் அதிமுகவின் அரசியலில் முக்கிய தினமாக இருக்கப்போகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஒபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன். ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனை முடிந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது வைத்தியலிங்கம் பேசுகையில், ''நீதிமன்ற தீர்ப்பு 9 மணிக்கு. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து எங்கள் நடவடிக்கை இருக்கும். அதிமுகவிற்கு ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர். இப்பொழுதும் அவர்தான் ஒருங்கிணைப்பாளர், எதிர்காலத்திலும் அவர்தான் ஒருங்கிணைப்பாளர்'' என்றார். அப்பொழுது அவரது அருகில் நின்றுகொண்டிருந்த தொண்டர் ஒருவர் 'சோழ மண்டல தளபதி அய்யா ஆர்.வி' என உறுத்த குரலில் கோஷமிட, கோபமடைந்த வைத்தியலிங்கம் 'யோவ்...' என அடிக்க பாய்ந்தார். அந்த தொண்டர் பயத்தில் வாயை கையால் பொத்திக்கொண்டார். தொடர்ந்து பேசிய வைத்தியலிங்கம் ''அதாவது ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டது இந்த இயக்கம். இந்த 2,600 பேரால் எதுவும் செய்ய முடியாது'' என்றார்.