ஊத்தங்கரை அருகே, பட்டாசுக் கடை திடீரென்று வெடித்துச் சிதறிய சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் பாஷா (30). இவர், சாமல்பட்டி - குன்னத்தூர் சாலையில் பட்டாசுக் கடை வைத்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி புதிய ரக பட்டாசுகளைத் தயாரித்து அந்தக் கடையில் இருப்பு வைத்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (அக். 23) காலையில் பூட்டியிருந்த அவருடைய பட்டாசுக் கடைக்குள் இருந்து திடீரென்று பட்டாசுகள் வெடித்துச் சிதறின. கடைக்குள் இருப்பு வைத்திருந்த அனைத்துப் பட்டாசுகளும் அரை மணி நேரத்திற்குள் வெடித்துச் சிதறியதால், அந்தப் பகுதியே புகை மண்டலமானது. எங்கும் பட்டாசு வெடிமருந்து நெடியால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தை சற்றும் எதிர்பாராத அப்பகுதி மக்கள் இதுகுறித்து சாமல்பட்டி காவல்நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் சாம்பலாயின. மின் கசிவு அல்லது வெயிலால் ஏற்பட்ட சூடு தாங்காமல், பட்டாசுகள் வெடித்துச் சிதறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. சாமல்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.