சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 86வது பட்டமளிப்பு விழாவில், மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் பங்கேற்றுப் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “1929-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சமுதாய முன்னேற்றத்திற்கு, இந்தியாவை உலகத் தன்மையாக மாற்றுவதற்கும் தரமான கல்வியை வழங்கத் தொலைநோக்குடன் உருவாக்கப்பட்டது.
உயர்தர கல்வியை வழங்குவதிலும், ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதிலும் அண்ணாமலைப் பல்கலை. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது இயற்கை பேரழிவுகள் மற்றும் தொற்று நோய்கள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் நம் வாழ்க்கையைச் சீர்குலைக்கும். இந்த அசாதாரண சூழ்நிலைகள் வழிநடத்த மீள் தன்மை மற்றும் தகவமைப்பை வளர்ப்பது முக்கியமாகும்.
மீள் தன்மை துன்பத்திலிருந்து மீண்டு வந்து சவால்களை எதிர்கொள்ளும் வலிமையைக் கண்டறியும் திறனாகும். மீள் தன்மை மற்றும் தகவமைப்பு உருவாக்கப் பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் கூட கற்றுக்கொள்வதற்கும் வளர்வதற்கு உங்கள் திறனை நம்புங்கள். திறம்படச் செயல்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களை உயர்த்தும் மற்றும் ஊக்குவிக்கும் நபர்களுடன் பழகுங்கள். வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான ஓய்வு ஆகியவற்றின் மூலம் உசல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கவனித்து கொள்ளுங்கள். இதனை வளர்ப்பதன் மூலம் சவால்களை சமாளித்து உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
கோவிட்-19 தோற்று நோய் உலகளாவிய சுகாதார நெருக்கடியாகும். இது உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பின்னடைவையும். ஒத்துழைப்பையும் சோதித்தது. உலக சுகாதார அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. நோய் பரவும் செய்தி எச்சரிக்கையை முன்னதாக வெளியிட்டது. வைரஸின் தீவிரம் குறித்து நாடுகளை எச்சரிக்கை விடுத்தது. இது உலகெங்கிலும் உள்ள அரசுகளை, நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தூண்டியது. பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டன. இவை கோவிட்-19 எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றது.
மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் மற்றொரு உலகளாவிய நிகழ்வு செயற்கை நுண்ணறிவு ஆகும். ஏஐ (AI) செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை அங்கீகரிப்பது அவசியம். AI சுகாதாரம் முதல் கல்வி வரை, பொறியியல் முதல் விவசாயம் வரை, மனிதநேயம் முதல் விண்வெளி அறிவியல் வரை பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் சக்தி செயற்கை நுண்ணறிவுக்கு உள்ளது. இது மனித திறன்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.
செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நாம் உருவாக்க முடியும். இது மருத்துவம், பருவநிலை அறிவியல் மற்றும் சமூகநீதி போன்ற துறைகளில் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு உலகளவில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் கற்பவராக இருப்பது அவசியம். எதிர்கால சவால்களையும், வாய்ப்புகளையும் பெற செயற்கை நுண்ணறிவு கொள்கைகளை தழுவுவதின் மூலம் சிறந்த உலகத்தை உருவாக்கலாம். கல்வி என்பது அறிவை பெறுவது மட்டுமல்ல. நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தத் தேவையான திறன்களையும் மதிப்புகளையும் வளர்ப்பதாகும் " என்று பேசினார்.