Skip to main content

"வார்த்தைகளில் சொல்ல முடியாத சோகம்" - தஞ்சாவூர் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் இரங்கல் 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Ram Nath Kovind on Thanjavur incident

 

தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல 94ஆம் ஆண்டு சதயவிழா நேற்று தொடங்கியது. 

 

விழாவின் ஒரு பகுதியாக, நேற்று இரவு மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து வீதி உலாவாக கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்ட நிலையில் இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தஞ்சாவூரில் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியது வார்த்தைகளில் சொல்ல முடியாத சோகம். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்