நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம் மற்றும் ஐந்தாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25 ஆம் தேதியும், இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஆனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் இந்தியில் பேசிய மர்ம நபர் ஒருவர், “பிரதமர் மோடியை கொலை செய்து விடுவேன்” எனப் பேசிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இது குறித்து சென்னை காவல் துறையினருக்கும், சைபர் கிரைம் போலீசாரும் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மர்மநபர் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விசாரணை மேற்கொண்டுள்ளார். மர்ம நபர் ஒருவர் பிரதமரை கொலை செய்யப் போவதாக கூறி மிரட்டல் விட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.