Skip to main content

'தினமும் 20 ஆயிரம் ரெம்டெசிவிர் தேவை' - மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

UNION RAILWAY AND COMMERCE MINISTER AND CM MKSTALIN TELEPHONE COVERSATION

 

மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, மத்திய அமைச்சரிடம் ரெம்டெசிவிர் மருந்து தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கரோனா தொற்றிற்காகச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தைத் தேவையான அளவிற்குக் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் ஆறு பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

 

அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழகத்திற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தித் தர வேண்டுமென மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார். 

 

நாளொன்றுக்கு தமிழகத்திற்குக் குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்ய முடியுமென்றும் முதல்வர் வலியுறுத்தினார். மத்திய அமைச்சரும் இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்