மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கடந்த ஆண்டு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று அதன் பின்னர் நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. அதில் இந்தியா முழுவதும் ரயில்வே, சுங்க வரி, வணிக வரி, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 71 ஆயிரம் பேர் தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.
இந்தியா முழுவதும் மொத்தம் 45 இடங்களில் பணி ஆணை வழங்குவதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மூன்று இடங்களில் பணி ஆணை வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணி ஆணை வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளில் தேர்வாகியுள்ள 129 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதில் 25 நபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். மீதமுள்ள நபர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 25 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுங்க வரித்துறையின் திருச்சி மண்டல ஆணையர் அணில் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மூத்த சுங்க வரித்துறை அதிகாரிகள் மற்றும் வணிகவரித்துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியாக சுங்க வரித்துறையின் இணை ஆணையர் பிரதீப் நன்றி தெரிவித்தார்.