மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் 50- க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகள் ஏந்தி ஆம்பூர் சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் காவேரி மீட்பு குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, எல்.ஐ.சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மணிமாறன், பிரகாஷ், வேல்முருகன், மகளிரணி உறுப்பினர்கள் தமிழ்மொழி, செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், மாந்த நேயப் பேரவை பஞ்சநாதன், மக்கள் அதிகாரம் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து எல்.ஐ.சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெண்ணாடம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதில் தமிழ் தேசிய பேரியக்க சிதம்பர நகரச் செயலாளர் எல்லாளன், உறுப்பினர்கள் வேந்தன் சுரேசு, இளநிலா, பொன்மணிகண்டன், பிரபாகரன், சின்னமணி, மகளிர் அணி பொருளாளர் கனிமொழி, சாந்தலட்சுமி, தமிழ்மணி உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.