Skip to main content

ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட டி.எஸ்.பி.! மனித உரிமை ஆணையத்தை நாடிய பெண்! 

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Unilaterally DSP! The woman who sought the Human Rights Commission!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். விவசாயியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் கந்தசாமி என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்துவந்துள்ளது. இது சம்பந்தமாக இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கு நடைபெற்றுவருகிறது. வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ராஜமாணிக்கத்தின் விவசாய நில வரப்பை கந்தசாமி தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, அந்த நிலத்தை அளவீடு செய்து தருமாறு வருவாய்த்துறையில் முறையிட்டார். அதற்கான கட்டணத்தையும் உரிய முறையில் செலுத்தியுள்ளார். அதனடிப்படையில் நிலத்தை அளந்து சர்வே செய்யும்படி வருவாய்த் துறையிலிருந்து உத்தரவு பெற்று நில அளவீட்டையும் செய்துள்ளார். 

 

அளவீடு செய்த அதிகாரிகள், அந்த நிலம் ராஜமாணிக்கத்துக்கு சொந்தமானது என்று உறுதி செய்துள்ளனர். இதனால், ராஜமாணிக்கம், கந்தசாமி ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே, கடந்த 22.4.2016ஆம் தேதியன்று தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜமாணிக்கம் நிலத்தில் பயிர் செய்திருந்த விவசாய பயிர்களை, கந்தசாமி தரப்பினர் சேதப்படுத்திவிட்டதாக கூறி ராஜமாணிக்கம் சம்பந்தப்பட்ட தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், போலீசார் அந்தப் புகாரை வாங்க மறுத்துள்ளனர். அதனால், ராஜமாணிக்கம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் பதிவு தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார். 

 

அதேசமயம், ராஜமாணிக்கம் மீது கந்தசாமி தரப்பினர் கொடுத்த புகார் குறித்து அப்போதைய கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. மதிவாணனனிடம் தியாகதுருகம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆலோசனை கேட்டுள்ளார். டி.எஸ்.பி. ஆலோசனையின்படி கடந்த  23.3.2016ஆம் தேதி இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்டர், விசாரணையின் முடிவில் கந்தசாமி கொடுத்த புகாரின் அடிப்படையிலும் டி.எஸ்.பி. மதிவாணன் தூண்டுதலின்படியும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு ராஜமாணிக்கம், அவரது சகோதரி குள்ளம்மாள், அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் ராஜமாணிக்கம் மற்றும் அவரது மைத்துனர் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். அதன்பிறகு ராஜமாணிக்கம், செல்வராஜ் ஆகிய இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். 

 

இந்த நிலையில் டி.எஸ்.பி. மதிவாணன் தூண்டுதலின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஒருதலைப்பட்சமாக வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து ராஜமாணிக்கத்தின் சகோதரி குள்ளம்மாள், ‘தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 26.4.2016ஆம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், எனது தம்பி ராஜமாணிக்கம் மற்றும் கணவர் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் எதிராகவும், எனது தம்பிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடனும் கந்தசாமி தரப்பினர் செயல்பட்டனர். இதற்கு அப்போதைய கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. (தற்போது ஓய்வு பெற்றுள்ள) மதிவாணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடந்தையாக இருந்து கந்தசாமி தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு, எனது தம்பி ராஜமாணிக்கத்திடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொய் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். எனவே பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

 

இது சம்பந்தமான வழக்கில் கடந்த 22ஆம் தேதி மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற இறுதிகட்ட விசாரணை முடிந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. மதிவாணன் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. எனவே மேற்படி இருவரும் பாதிக்கப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்