கடந்த 14 ஆம் தேதி தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்ட தமிழக பாஜக அண்ணாமலை, தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.
இந்நிலையில், அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் இந்த நோட்டீசை அனுப்பி இருந்தார். அதில் 'இழப்பீட்டுத் தொகையாக 500 கோடி தர வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்கத் தவறினால் குற்றவியல் வழக்கு தொடரப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அண்ணாமலையும் அதனை எதிர்த்து நோட்டீஸ் விட்டிருந்தார்.
இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உதயநிதி சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளார். அதில், 'உதயநிதி மீது ஆதாரமற்ற உண்மைக்கு புறமான பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். உதயநிதிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 50 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். அண்ணாமலை கூறியபடி நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் உதயநிதி எந்த காலத்திலும் இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. 48 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு திமுக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அவர் மீது நானும் வழக்கு தொடர்வேன் என திமுக எம்.பி கனிமொழியும் தெரிவித்துள்ளார்.