தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதோடு, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று புதிய அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், ''ஒரு குறையும் சொல்ல முடியாத தங்கக் கம்பி; வைதீக கோட்டைகள் மீது வெடிகுண்டுகள் வீசி தகர்த்து எறிகின்றவர் என்ற வர்ணனைக்கு முற்றும் பொருந்துபவர் நம்முடைய உதயநிதி ஸ்டாலின். துணை முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். அந்த சிறப்புமிக்க நாளில் அதை கொண்டாடியதோடு, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு முயற்சியால் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தேன்.
அப்போது அப்பாவுவை பற்றி எண்ணிக் கொண்டே வந்தேன். ராதாபுரம் தொகுதி என்பது 1996 ஆம் ஆண்டிலேயே தமாக உதயமான பொழுது எளிமையும், உறுதியும், உழைப்பும் உடைய ஒரு ஆசிரியர் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு காங்கிரஸில் இருந்தாலும் அல்லது எந்த கட்சியில் இருந்தாலும் மக்கள் பணிதான் முக்கியம் என்று முழக்கமிட்ட நம்முடைய சபாநாயகரை தந்த தொகுதி இது. அந்த மனமகிழ்ச்சியோடு இங்கே வந்திருக்கிறேன். அவர் 2016 ஆம் ஆண்டு போட்டியிட்ட தேர்தலில் இன்பத்துரை என்பவரிடம் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், அவரையே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்று எந்த சபையில் குண்டுக் கட்டாக தூக்கி எறியப்பட்டாரோ அதே சபைக்கு அதிகாரம் செலுத்துகின்ற சபாநாயகராக அங்கே அமர்ந்திருக்கிறார். உழைப்பிற்கும் சமுதாயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்கின்ற அந்த பெருந்தன்மைக்கும் சொந்தக்காரர் அப்பாவு'' என்றார்.