கூட்டுறவு துறை என்றாலே அனைவருக்கும் எளிதில் நினைவுக்கு வருவது நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்குவதுதான். இப்படியுள்ள துறையில் சில இடங்களில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை தயார் செய்து குறைந்த விலையில் வழங்குவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள சிசிஎம்எஸ் என்று அழைக்கப்படும் சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டப்பகுதிகளில் நேரடியாக 50- க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகளை நடத்தி வருகிறது. மேலும் 512 நியாயவிலை கடைகளுக்கு பொருட்களை மட்டும் வழங்கி வருகிறது.
இந்த கூட்டுறவு சங்கம் இதுமட்டும் இல்லாமல் சிதம்பரம் பகுதியில் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் உளுந்து, மணிலா உள்ளிட்ட பயிர் வகைகளை விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்து மதிப்பு கூட்டும் பணியை செய்து வருகிறது. கருப்பு உளுந்தை கூட்டுறவு சங்கத்தில் உள்ள நவீன இயந்திரம் மூலம் அதனை தோல் நீக்கி குண்டு வெள்ளை உளுந்தாக தரம் உயர்த்தப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கிறது. கருப்பு தோலையும் மாட்டுக்கு உணவாக பயன்படும் வகையில் தீவனமாக மாற்றி அதனையும் விற்பனை செய்து வருகிறது.
சிதம்பரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் தினந்தோறும் சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்திற்கு வருகை தந்து வெள்ளை உளுந்தை குறைந்த விலைக்கு வாங்கி செல்கிறார்கள். தற்போது கடையில் ஒரு கிலோ உளுந்து 130 என்றால் கூட்டுறவு சங்கத்தில் 115- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு ரூபாய் 15 மிச்சம் என்றாலும் சிதம்பரம் பகுதியில் விளையும் உளுந்துக்கு அதிக பசை தன்மை இருக்கு என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசபடுகிறது.
இதற்கு காரணம் சிதம்பரம் பகுதி டெல்டா விவசாயிகள் காவிரி தண்ணீரில் விவசாயம் செய்கிறார்கள் என்று வேளாண் துறையில் உள்ள அலுவலர்கள் மத்தியிலும் கூறப்படுகிறது. விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் உளுந்தை வாங்கி அதனை தரம் உயர்த்தி குறைந்த விலையில் விற்பனை செய்யபடுவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சங்கத்தை மேலும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதே இடத்தில் விவசாயிகளிடம் வாங்கும் உளுந்தை கொண்டு அப்பளம் தயார் செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு தில்லை நடராஜா அப்பளம் என்ற பெயரில் ரூபாய் 10 விலையில் எந்த வேதிபொருள் கலப்படம் இல்லாமல் அனுப்பி வருகிறார்கள். தற்போது கடையில் விற்பனை செய்யப்படும் அப்பளத்தை கொதிக்கும் எண்ணையில் கொஞ்சம் கிள்ளி போட்டால், அந்த எண்ணை சட்டி அளவிற்கு பெரிதாகும். அதில் வீச்சு என்ற வேதிப்பொருள் கலப்பதால் அதுபோல் மாறுகிறது. ஆனால் இந்த அப்பளத்தை அப்படியே போட்டால், அதே அளவிற்கு தான் விரிவடையும். இதில் எந்த கலப்படமும் இல்லாததால் நல்ல இயற்கை மனுமுடன் உள்ளது என மக்கள் இதனை அதிகம் விரும்புகிறார்கள்.
மேலும் அதே இடத்தில் பொதுமக்களின் உடல்நிலையை பாதுகாக்கும் வகையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த எள் மற்றும் மணிலா, தேங்காயைக் கொண்டு கலப்படம் இல்லாமல் மரச்செக்கில் ஆடி நல்லெண்ணை, மணிலா எண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவைகள உற்பத்தி செய்து பாட்டலில் அடைத்து கடைகளில் செக்கில் ஆடிய எண்ணெய் விற்பனை செய்வதை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இது அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சிதம்பரம் என்ற சிறிய நகரத்தில் இருந்து கொண்டு தமிழக அளிவில் 3- வது இடத்தில் இந்த கூட்டுறவு சங்கம் உள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கத்தை லாபகரமாக நடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டபோது விவசயிகளிடம், இது போன்ற விளைபொருட்களை வாங்கி தரம் உயர்த்தி விற்பனை செய்யலாம் என்ற முறையில், இதுபோன்று செய்தோம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது பொதுமக்கள் இதன் தரத்தை அறிந்து தேடி வருகிறார்கள். சேலம், ஈரோடு, திருச்செங்கோடு உள்ளட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிதம்பரம் உளுந்து மற்றும் அப்பளம் தான் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதனால் கூட்டுறவு சங்கம் நல்லமுறையில் இயங்குவதாகச் சங்கத்தின் தலைவர் டேங்க் சண்முகம், செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.