புதுச்சேரி மாநிலம் வடமங்கலம் என்ற பகுதியில் உள்ள ஒரு சோப்பு கம்பெனியில் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான சோப்பு பண்டல்களை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆத்தூரை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் பஸ் ஸ்டாப் அருகே ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த லாரி டிரைவர் கண்ணனை, அருகிலிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சாலையோரம் லாரி கவிழ்ந்ததில் அதில் ஏற்றி வந்த சோப்புகள் அடங்கிய பண்டல் பெட்டிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அந்த அட்டைப்பெட்டிகளில் பார்சலாக உள்ளே இருந்தது. மது பாட்டில்கள் என நினைத்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள செங்குறிச்சி பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அவைகளை அள்ளிச் சென்றனர்.
இப்படி மக்கள் அள்ளி சென்ற சோப்புகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என்கிறார்கள் சோப்பு கம்பெனி ஆட்கள். இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சோப்பு பண்டல்களை அள்ளிச் சென்ற பொதுமக்களை விரட்டி அடித்தனர். பின்னர் ஆட்களை வரவழைத்து சிதறிக்கிடந்த சோப்பு பார்சல் பண்டல்களை வேறு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சோப்பு பார்சல்களை மதுபாட்டில்கள் அடங்கிய பார்சல் என நினைத்து மக்கள் அள்ளிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.