ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'சுமார் 5,000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித்தவித்து வருகின்றனர். உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக சிறப்பு விமானம் மூலம் மீட்க வேண்டும். வந்தே பாரத் உள்ளிட்ட சிறப்பு விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். அதேபோல் உக்ரைனில் உள்ள தமிழர்களின் குடும்பங்களை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்க அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பு பணிகளுக்கு ஒரு இணைப்பு அலுவலரைத் தமிழகத்திற்கென்று அறிவிக்கலாம் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவ தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வு ஆணையராக உள்ள ஜெசிந்தா லாசரஸ் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உதவிகளைப் பெற மாநில கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.