சாத்தாங்குளத்தில் போலீசால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நேரில் சென்றார் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இது அப்போதே அரசியலாக்கப்பட்டது. இ.பாஸ் இல்லாமல் சென்னையிலிருந்து உதயநிதி எப்படிச் சென்று வந்தார் என அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பினார்கள்.
நோயின் தாக்கம் அதிகமாக பரவும் இந்தச் சூழ்நிலையில் உதயநிதி இ- பாஸ் இல்லாமலேயே எப்படி அங்குச் சென்றார்? அவருக்கு யார் அனுமதி கொடுத்தது என்று அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ரஜினி இ பாஸ் எடுத்து கேளம்பாக்கம் சென்ற சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் இதுகுறித்து அமைச்சரிடம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், உதயநிதி இ பாஸ் எடுத்தாரா என்பதற்கு தற்போது வரை ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் இதுதொடர்பான சர்ச்சை எழுந்த போதே, ரோட்டில் நிற்கும் அனைத்து காவலர்களிடமும் எங்கள் இ பாஸை காண்பித்தே சாத்தான்குளம் சென்றோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.