திருக்குவளைக்கு பிரச்சாரத்திற்கு வந்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, மேடையில் வைத்தே போலீசார் கைது செய்தனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான, 100 நாள் பிரச்சாரப் பயணத்தை தொடங்க திட்டமிட்ட உதயநிதி ஸ்டாலின், முதல்நாள் பிரச்சாரமாகக் கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில், இன்று (20 ஆம் தேதி) துவங்கவிருந்தார். திருச்சியில் இருந்து திருவாரூர் வந்தவர், அங்கு சன்னதி தெருவில் இருக்கும், அவரது உறவுக்காரர் வீட்டில் மதிய உணவை முடித்துக்கொண்டு, காட்டூரில் அமைந்துள்ள அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, திருக்குவளைக்குச் சென்றார்.
அதற்கு முன்பே, திருவாரூர் நாகப்பட்டினம் எஸ்,பி, தஞ்சை சரக டி.ஐ.ஜி அங்கு முகாமிட்டிருந்தனர். 'திருக்குவளைக்கு 5 வாகனத்திற்கு மேல் வந்தால் கைது செய்வோம், அதோடு வீட்டு வாசலில் அமைக்கப்பட்டிருந்த, மேடையில் ஏறி பிரச்சாரம் செய்தால் கைது செய்வோம்' எனக் கூறியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பாணியில், திருக்குவளையில் உள்ள கலைஞரின் வீட்டிற்குச் சென்று, அங்குள்ள கலைஞர், தயாநிதிமாறன் உள்ளிட்டவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அங்கு, "கரோனாவில் நடந்த ஊழலில் துவங்கி அ.தி.மு.க அரசின் அவலங்கள் என பலவற்றைப் பட்டியலிட்டு விமர்சித்தார். அதோடு பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் கூறினார். அங்கிருந்து அப்படியே அடுத்த நிகழ்வுக்குச் சென்று விடுவார் எனக் கட்சிக்காரர்கள் காத்திருக்க, சரசரவென மேடையில் ஏறிய உதயநிதி, கரோனாவால் மறைந்த துரைக்கண்ணுவின் மரணத்தில் நடந்த பேரம், நீட் தேர்வு அவலம் உள்ளிட்டவைகளைப் பட்டியலிட்டு கூறிய பிறகு மேடையை விட்டு இறங்கினார்.
மேடைக்கு அருகில் தயார் நிலையில் இருந்த காவல்துறையினர், அவரை கைது செய்து திருக்குவளையில் உள்ள எம்.வி.கே திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். உதயநிதியின் கைதைக் கண்டித்து, வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.சதாசிவம் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் நாகப்பட்டினம் சாலையில் உள்ள செம்போடை உள்ளிட்ட மூன்று இடங்களில் சாலை மறியலில் இறங்கினர்.
இந்நிலையில், தற்பொழுது கைது செய்யப்பட்ட தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட கட்சியினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.