Skip to main content

கள்ளத் துப்பாக்கியுடன் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த இருவர்!

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

two youngsters in dharmapuri forest area

 

அஞ்செட்டி அருகே தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் கள்ளத்துப்பாக்கி, டார்ச் லைட், பேட்டரி சகிதமாக சுற்றித் திரிந்த இருவரில் ஒருவர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரகம், பனை காப்புக்காட்டில் ஜன.21ம் தேதி இரவு, வனச்சரக அலுவலர் சீதாராமன் தலைமையில் வனக் காப்பாளர்கள் பெருமாள் மற்றும் பருவதன் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  இரவு 11 மணியளவில், பீனாரிபிலாட் சரகப் பகுதியில் நெற்றியில் டார்ச் லைட் கட்டிக்கொண்டு, மர்ம நபர்கள் இருவர் சுற்றிக்கொண்டு இருந்தனர். அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை அருகில் இருந்த புதருக்குள் வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஒருவர் மட்டும் வசமாக சிக்கிக்கொண்டார்.

 

விசாரணையில் அந்த மர்ம நபர், வண்ணாத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சக்தி (22) என்பது தெரியவந்தது. வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கி, பேட்டரி மற்றும் டார்ச் லைட்டுகளுடன் வந்திருப்பது தெரியவந்தது. மேலும், தப்பி ஓடிய நபரும் அதே ஊரைச் சேர்ந்த போதன் என்கிற மயில்வாகனன் (46) என்பதும் தெரியவந்தது.

 

வாலிபர்கள் பிடிபட்ட இடம், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடம் ஆகும். அதனால் அவர்கள் யானைகளை வேட்டையாடி, தந்தம் திருடும் நோக்கத்தில் வந்தார்களா? என்றும் விசாரித்தனர். சக்தியை கைது செய்த வனத்துறையினர் அவரை தேன்கனிக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைத்தனர்.

 

இதற்கிடையே, தலைமறைவாகிவிட்ட போதனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், அஞ்செட்டி வனச்சரக பகுதியில் இரவு நேர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தவும், வனக் குற்றங்களைத் தடுக்கவும் ஓசூர் வனக் கோட்ட, வன உயிரினக் காப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்