கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது கொழுந்திராம் பட்டு. இந்த கிராமத்தை சேர்ந்த ராயப்பன் மகன் அந்தோணிசாமி, இவரது மகன் வில்சன். இவர்களது உறவினர் சேலத்தை சேர்ந்த பிராங்கிளின் இவர்கள் மூவரும் நேற்று மாலை தியாகதுருகத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி யமஹா பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அந்தோணிசாமி பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். இவர்களது வாகனம் தியாகதுருகம் அடுத்த பாவத்தோடு என்ற இடத்தில் மாலை 4.30 மணி அளவில் சென்று கொண்டிருந்ததுபோது அந்த பகுதியில் பாலத்திற்கு அருகில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் பாவந்தூர் கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் சரஸ்வதி நாகராஜ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அந்தோணி சாமி ஓட்டி சென்ற பைக் நிலைதடுமாறி இவர்கள் மூவர் மீது வேகமாக சென்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பைக்கை ஓட்டி வந்த அந்தோணிசாமி இறந்துபோனார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த முத்தம்மாள், சரஸ்வதி, நாகராஜ் ஆகிய மூவரையும் பைக்கில் வந்த காயம்பட்ட இருவர் உட்பட ஐந்து பேரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முத்தம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சரஸ்வதி, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் நாகராஜ் உட்பட மற்ற மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தியாகதுருகம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.