கோவை ஒப்பணக்கார வீதியிலுள்ள கணேஷ் மெடிக்கல் ஷாப் என்கிற கடையை நடத்திவருபவர் விஜய் அலங்காரம். இவர் கடந்த முப்பது வருடங்களாக அதே பகுதியில் கடையை நடத்திவருகிறார். இந்த நிலையில், நேற்று (27.07.2021) வெரைட்டி ஹால் சாலை பகுதியைச் சேர்ந்த முகமது ரசூல் மற்றும் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரும் கணேஷ் மெடிக்கல் கடைக்குச் சென்றனர். பின்னர் பீளமேடு பகுதியில் உள்ள சுமித் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலின் மருந்துச் சீட்டைக் கொடுத்து, அதில் குறிப்பிட்டுள்ள இரண்டு மாத்திரைகளைக் கொடுக்க கடைக்காரரை வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த விஜய் அலங்காரம், சுமித் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு ஃபோன் மூலம் தொடர்புகொண்டு, “இந்த மருந்து சீட்டு நீங்கள் கொடுத்ததுதானா?” என கேட்டுள்ளார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம், தவறான மருந்து சீட்டு என தெரிவித்தது. இதனால் கடைக்காரர் மருந்துகள் எதுவும் தரவில்லை. இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், விஜய் அலங்காரம் ஒப்பணக்கார வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் அடிப்படையில் போதைக்காகவே இந்த மாத்திரைகளைக் கேட்டோம் என ஒப்புக்கொண்டனர். இதையடுத்து முகமது ரசூல், சக்திவேல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.