அப்பாவுக்குப் பயந்து உயிரைவிட்ட மகன்! - ஆடுகள் இறந்ததால் நடந்த சோகம்!
“ஆடு ரெண்டு செத்ததுக்காக மனுஷன் சாவானா? அற்ப வயசுல ஆட்டுக்காக உசிர விட்டுட்டானே சரத்குமார்..” எனப் புலம்புகிறார்கள், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, நல்லுக்குறிச்சி கிராமத்தில்.
முனியசாமிக்கு ராஜ்குமார் (24 வயது), சரத்குமார் (23 வயது) ஆகிய இரண்டு மகன்களும் மாரீஸ்வரி, கார்த்தீஸ்வரி ஆகிய இருமகள்களும் உள்ளனர். சரத்குமார் பக்கத்து ஊரான வீரசோழனுக்குச் சென்றுவிட்ட நிலையில், அன்று ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு பத்திக்கொண்டு சென்றார் சரத்குமார். வீரசோழன் சென்ற அண்ணன் ராஜ்குமார் நல்லுக்குறிச்சி வீட்டுக்கு திரும்பியபோது, 2 ஆடுகள் செத்துக்கிடந்துள்ளன. தம்பி சரத்குமாரிடம் விபரம் கேட்டபோது, “நம்ம ஊரு விசேஷ வீட்ல சோத்த தின்னுட்டு ஆடு ரெண்டும் செத்துப்போச்சு. அப்பா வந்ததும் திட்டுவார்” என்று பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உடனே அண்ணன் ராஜ்குமார் “அப்பா திட்டமாட்டார். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஆறுதலாகப் பேசியிருக்கிறார்.
சரத்குமாரோ பயம் விலகாமல், மலைராஜ் என்பவரது தோட்டத்திற்குச் சென்று, பருத்திக்கு அடிக்கும் பாரிபாஸ் மருந்தைக் குடித்துவிட்டார். இரவு 7-40 மணிக்கு தகவல் தெரிந்து, அப்பா முனியசாமி அங்கு விரைந்து டூ வீலரில் சரத்குமாரை ஏற்றிக்கொண்டு, வீரசோழன் மருத்துவமனையில் சேர்த்தார். பிறகு, அங்கிருந்து தனியார் வாகனம் மூலம் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இரவு 9 மணிக்கு சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சரத்குமார் இறந்துபோனார்.
குடியைக் கெடுத்த குடி! - உயிரைவிட்ட மாரிமுத்து!
“பாழாய்ப்போன குடி மாரிமுத்துவ சாகடிச்சிருச்சே.. பொண்டாட்டி புள்ளைங்கள அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டானே..” என ராஜபாளையம் தாட்கோ காலனிவாசிகள் வேதனைப்படுகிறார்கள்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்துவுக்கும் (வயது 35), கருப்பாயிக்கும் (வயது 30) திருமணம் முடிந்து 15 ஆண்டுகளாகிறது. இத்தம்பதியருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். மாரிமுத்து கொத்தனார் வேலைக்கும், கருப்பாயி மில்லுக்கும் சென்றுவந்தனர். குடிப்பழக்கத்தால் மாரிமுத்து, ஊதாரித்தனமாக பணத்தைச் செலவு செய்து, குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்திருக்கிறார். மனைவி கருப்பாயி மற்றும் உறவினர்கள் ‘குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்..’ என்று கூறியபோதெல்லாம், ‘பிராந்தி குடிக்காதேன்னு என்னைக் கண்டித்தால், நான் செத்துப்போயிருவேன்.’ என மிரட்டலாகச் சொல்லி வந்திருக்கிறார். அன்றும் வழக்கம்போல், வீட்டுக்கு மாரிமுத்து குடித்துவிட்டு வர, ‘ஏன் இப்படி நடந்துக்கிறீங்க?’ என்று கருப்பாயி கேட்டிருக்கிறார். விட்டுவிட முடியாத குடிப்பழக்கத்தாலும், அறிவுரை பிடிக்காததாலும் விரக்தியான மாரிமுத்து, வீட்டில் இருந்த எறும்புப் பொடியைக் தண்ணீரில் கலக்கிக் குடித்திருக்கிறார்.
முதலில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையிலும், அடுத்து திருநெல்வேலி பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் மாரிமுத்து.