
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. தற்போது மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்பச் சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசிகள் குறைந்த அளவே வருவதால், கையிருப்பைப் பொறுத்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இருப்பு இல்லாத நாட்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. 21 ந் தேதி மாவட்டம் முழுவதும் 76 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று 22 ந் தேதியும் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்பச் சுகாதார நிலையங்கள், புறநகர்ப் பகுதியில் உள்ள 66 மையங்களில் கரோனா தடுப்பு ஊசி மக்களுக்குச் செலுத்தப்பட்டது.
வழக்கம்போல் நள்ளிரவு முதலே தடுப்பூசி போடப்படும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடப்பட்டது. அங்கு முதல் நாள் நள்ளிரவு முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று செருப்பு, குடைகள், கற்களை வைத்து இடம்பிடித்தனர். தடுப்பூசி போடப்படும் மையம் முன்பு நீண்ட வரிசையில் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்றனர். முதலில் வந்த 200 பேருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
தடுப்பூசி மையங்களின் முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அப்போது ஒலிபெருக்கி மூலம் மக்கள் தனி மனித இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதைப்போல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சென்னிமலை மொடக்குறிச்சி சத்தியமங்கலம், கவுந்தப்பாடி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. ஈரோடு மாவட்ட மக்கள் நீண்ட நெடுநேரம் ஆர்வத்துடன் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.