திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை நிம்மியப்பட்டு கிராமங்களுக்கு இடையில், தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் சாக்கு மூட்டையில் ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டவர், பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது.
கொலை செய்தது யார் என ஆலங்காயம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்துபோன நாகராஜுக்கும் பெத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான கோகிலா என்பவருக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. அவரை விசாரித்ததில், கோகிலா நாகராஜுக்கு இடையில் ஏற்பட்ட சில பிரச்சனையால், வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து, நாகராஜ் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாகவும், பின்னர் நாகராஜ் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அந்த வாக்குமூலத்தின் பேரில் கோகிலா மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.