கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, அண்ணாமலை நகர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில், நெய்வேலி காவல்துறை கண்காணிப்பாளர் கங்காதரன் மேற்பார்வையில், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல் அமீது, டெல்டா பிரிவு ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார் கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (11.02.2021) இரவு நெய்வேலி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் எனத் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை விசாரித்தபோது, அவர்கள் குறிஞ்சிப்பாடி பெத்தனாங்குப்பத்தைச் சேர்ந்த தேவா(26) மற்றும் அருகேயுள்ள கன்னித்தமிழ்நாடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(35) எனவும் தெரிய வந்தது.
இவர்கள் நெய்வேலி பகுதியில், கடந்த மாதம் வீட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், 25 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகிவற்றைத் திருடியதும், அதேபோல் மற்றொரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் கடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 7 பைக்குகள் மற்றும் 15 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்டவைகளின் மதிப்பை 8 லட்சம் ஆகும். மேலும் 2 பேரும் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு போலீஸர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.