விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புதுச்சேரி சாலையில் உள்ளது கிளியனூர் சோதனைச் சாவடி. இந்த சோதனைச்சாவடியில் திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக வந்த இண்டிகா காரை தடுத்து நிறுத்தினர். அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. இதையடுத்து உடனே திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக சென்று மரக்காணம் கூட்டுரோடு சந்திப்பு அருகே அந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் 5 பெட்டிகளில் 250 மதுபாட்டில்கள் இருந்து தெரிய வந்தது. அந்த காரில் வந்த திருவண்ணாமலை மாவட்டம் எட்டிவாடியை சேர்ந்த மகேஸ்வரன்(26), ஏழுமலை (42) ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அதில் தங்களது உறவினரின் வீட்டில் நடைபெற உள்ள காதணி விழாவையொட்டி கிடா விருந்து நடைபெற உள்ளதால் அந்த விருந்தில் கலந்துகொள்ள வரும் உறவினர்களுக்கு வழங்குவதற்காக மதுபாட்டில்ககளை புதுச்சேரியிலிருந்து இந்த மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக இருவரும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதை திண்டிவனம் மதுவிலக்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.