ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 261 ரன்கள் சேஸ் செய்யப்பட்ட நேற்றைய ஆட்டம் ஒரு பேட்டிங் ட்ரீட் என்றால் அது மிகையாகாது. ஆனால் பந்து வீச்சாளர்களின் நிலைதான் மிகவும் பரிதாபாகரமாக அமைந்தது. தற்போது பந்து வீச்சாளர் ஒருவர் நேற்றைய போட்டி பற்றி தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.
ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி நரைன், சால்ட் அதிரடியால் முதல் 10 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.
இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71, சால்ட் 75 என சிறிய இடைவெளியில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 (23), ரசல் 24(12), ஸ்ரேயாஸ் ஐயர் 28(10) என அவர்கள் பங்குக்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது.
பின்னர் 262 ரன்கள் எனும் வரலாற்று இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். பிரப்சிம்ரன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 108 என மிரட்ட, சஷாங்க் சிங் ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக மாற்றி 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும்.
இப்படி அதிக ஸ்கோர்கள் தொடர்ந்து அடிக்கப்படுவதும், அவை எளிதில் சேஸ் செய்யப்படுவதும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் முற்றிலுமாக பேட்ஸ்மேன்கள் விளையாட்டாக மாறி வருகிறதென்றும், இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படி பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்படும் பிட்சுகள் இப்போதைய கொண்டாட்டத்துக்கு வேண்டுமானால் உதவுமென்றும், இது இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடர்களில் வெல்ல உதவாது என்றும் பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது இந்திய பந்துவீச்சாளர் ஒருவரே அதுபற்றி வாய் திறந்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூத்த வீரருமான அஸ்வின் தற்போது இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளப்பக்கமான எக்ஸ்-ல் “தயவுசெய்து யாராவது பந்து வீச்சாளர்களைக் காப்பாற்றுங்கள் “ என்றும், “ 260+ சேசிங்கில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் போதும் என்ற நிலை. இது மூழ்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.