சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கடலூர் சிப்காட் நிறுவனத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளாலும், ரசாயன கழிவுகளினாலும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதற்கெல்லாம் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 10-ம் தேதி எனது தலைமையில் கடலூர் சிப்காட் பகுதியில் மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளேன்.
சிதம்பரம் தில்லைக்காளி கோயில் பகுதியில் 60 ஆண்டுகள் வசித்து வந்த மக்களின் 360 வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்கவில்லை. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடும் கட்டித் தரப்படவில்லை. அவர்கள் அகதி போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி 360 குடும்பத்திற்கு மாற்று இடமும், அடுக்கு மாடிக் குடியிருப்பும் கட்டித்தர வேண்டும். அப்படி இல்லையென்றால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும்போது 360 குடும்பத்தினரையும் சென்னைக்கு அழைத்து எனது தலைமையில் போராட்டத்தில் ஈடுபடுவேன். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை பாஜக அரசு வாக்கிற்காக செய்தாலும் கூட வரவேற்கத்தக்கது. இது ராஜீவ்காந்தியின் கனவு திட்டமாகும். வருகிற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மோடி தலைமையிலான அரசு 7.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகத் தணிக்கைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அது பற்றி பேசாமல் சனாதனம் உள்ளிட்டவற்றைப் பேசி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி மூலம் சட்டத்திற்குப் புறமாக ரூ. 128 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் மக்களுக்குத் திருப்பித் தர வேண்டும்” எனப் பேசினார்.