தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் சாதி ரீதியாகப் பேசும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொறுப்பு குறிப்பிட்ட சாதியினருக்குச் செல்லக்கூடாது எனத் துணைத் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி கூறுகிறார். அதற்கு அந்த மாணவன் ‘எல்லோரும் சமம்தானே’ எனக் கூறுவது பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மாணவரின் சாதியைச் சேர்ந்தவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஆசிரியை பேசுவது ஆடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், மாணவரிடம் சாதி ரீதியாகப் பேசிய கலைச்செல்வி மற்றும் மீனா ஆகிய இரு ஆசிரியைகளைப் பணி இடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவர்களிடத்திலும் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.