தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் பகுதிகளான குளத்தூர், வேம்பார், கீழவைப்பார் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாகவே கஞ்சா கடத்தப்பட்டுவருவதாக கடலோரப் பாதுகாப்புப் படையான மரைன் போலீசுக்கும் மாவட்டக் காவல்துறைக்கும் அவ்வப்போது தகவல்கள் கிடைத்துவருகின்றன. தற்போதும் அதுபோன்ற ஓர் இரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி.யான ஜெயகுமார், மரைன் போலீசுக்கும் விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷுக்கும் மேற்படி பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவது பற்றிய தகவல்களை அனுப்பியிருக்கிறார். அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பார்வையில், குளத்தூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன், எஸ்.ஐ. செல்வன் மற்றும் காவலர் உள்ளிட்டோர் குளத்தூர் மற்றும் கீழவைப்பார் பகுதியில் நேற்றிரவு (30.07.2021) ரோந்து சென்றிருக்கின்றனர்.
கடலோரக் காவல் மரைன் யூனிட்டின் சிறப்பு எஸ்.ஐ. விஜயகுமார், பரமசிவன் ஆகிய போலீசார் குளத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழவைப்பார் பகுதியில் மற்றொரு குழுவாக ரோந்து சென்றிருக்கின்றனர். அது சமயம் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக, ஆட்கள் யாரும் இல்லாமல் நின்றிருந்த காரை மரைன் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதிலிருந்து 4 மூட்டைகளில் சுமார் 1 கிலோ மற்றும் 2 கிலோ அளவிலான 40 பொட்டலங்கள் என்று மொத்தம் 76 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியிருக்கிறது. காரையும் கஞ்சாவையும் கைப்பற்றிய மரைன் போலீசார், உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையறிந்த குளத்தூர் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். “எங்கள் காவல் லிமிட்டில் வந்து நீங்கள் எப்படி சோதனையிடலாம்” என்ற இன்ஸ்பெக்டர், காரையும் அதிலிருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றிருக்கிறார். போலீசார் சோதனைக்கு வருவதை எப்படியோ தெரிந்துகொண்ட கடத்தல்காரர்கள், காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியிருக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு சுமார் 7.60 லட்சம் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து, தப்பியோடிய கடத்தல்காரர்களைத் தேடிவருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பியான ஜெயகுமார், “இந்த ஆண்டு மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் சம்பந்தப்பட்டதாக 200 வழக்குகள் பதிவுசெய்து, 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்ட 348 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சுமார் 100 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அதே சமயம் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 923 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 932 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று சட்ட விரோதமான போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும், அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார்.
போதைப்பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் மற்றும் உணவுப் பொருள்கள் இலங்கைக்குக் கடத்தப்படுவது தொடர் சம்பவம் என்றாலும் எஸ்.பி. ஜெயக்குமாரின் அதிரடி நடவடிக்கையால் பல கடத்தல்காரர்கள் பிடிபட்டும்வருகிறார்கள்.