பஞ்சாயத்து அலுவலகம் மூலம் நடக்கும் ஒப்பந்தப் பணிகளில் ஆளுங்கட்சிக்குக் கொடுப்பது போல் தனக்கும் கமிசன் வேண்டும் என பஞ்சாயத்து பெண் ஊழியரை நிர்ப்பந்தித்த பிரச்சனையில், பட்டதாரி வாலிபரை அடித்தேக் கொன்றார் அமமுக நகர செயலாளர் ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணி செய்துவருபவர் உத்திரக்கனி. சமீபத்தில் இவருடைய கணவர் தங்க மாரியப்பன் இறந்துவிட, தன்னுடைய மூன்று மகன்களோடு வசித்து வருகின்றார். அதே வேளையில் அமமுக கட்சியின் புதியம்புத்தூர் ந.செ-வாக இருக்கும் பெஸ்கிராஜா, " பஞ்சாயத்தில் என்னென்ன வேலைகள் நடக்கின்றது என எனக்குத் தெரியும். அதில் யார் யாருக்கு எவ்வளவு கமிசன் செல்கின்றது என்பதும் எனக்குத் தெரியும். ஆளுங்கட்சிக்கு என்னக் கொடுக்கிறாயோ அது போல் எனக்கும் கமிசனைக் கொடுத்துவிடு." எனும் ரீதியில் சமீபகாலமாக பஞ்சாயத்து ஊழியர் உத்திரக்கனியை மிரட்டி வந்துள்ளார். ஆனால் எதற்கும் உத்திரகனி. செவிமடுக்கவில்லையென்பதால் முகநூல் மற்றும் வாட்ஸ் அப்களில் அவதூறு பரப்பி வந்திருக்கின்றார் அவர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று முகநூலில் உத்திரகனியின் செயல்பாடுகளை அவதூறாகப் பதிவிட்டுள்ளார் பெஸ்கி ராஜா. அதற்குப் பதில் கூறும் விதமாக உத்திரக்கனியின் மூத்த மகனும், பட்டதாரி வாலிபாரான ஜெயராமன் காரசாரமாக பதிவிட, பிரச்சனை பெரிதானது. இவ்வேளையில், நேற்றிரவு எட்டு மணியளவில் தனது கடையில் வேலைப் பார்க்கும் ரகுபதியை சேர்த்துக் கொண்டு உத்திரகனியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுப்பட்டிருக்கின்றார் பெஸ்கி ராஜா. வாக்குவாதம் கைகலப்பாக மாற அடித்தேக் கொல்லப்பட்டிருக்கின்றார் ஜெயராமன். தடுக்க வந்த உத்திரகனிக்கும் கை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். கமிசன் தராததால் பெண் ஊழியர் மகன் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.