கடந்த 2018ம் ஆண்டு மே 22 ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. அறிக்கையை வரவேற்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அறிக்கையின் அடிப்படையில் சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலையை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
திருமலை தற்போது நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணிபுரிகிறார். மேலும் நெல்லை மாவட்ட திசையன்விளை காவல் நிலையத்தில் கிரேடு 1 காவலராக பணிபுரியும் சுடலைக்கண்ணு, சங்கர் மற்றும் சதீஸ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.