Skip to main content

விவசாயியை பாதுகாக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

tuticorin agaram village balakrishnan withh police protection viral issue

 

தூத்துக்குடி வல்லநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக முறப்பநாடு காவல் நிலையத்தில் லூர்து பிரான்சிஸ் புகார் அளித்ததால் தான் இந்த கொலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயியான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வல்லநாடு கிராம ஊராட்சியின் 1வது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் ஊராட்சி வார்டு உறுப்பினராகிய பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் வசித்து வரும் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதாக கூறி அங்கு நடைபெறும் மணல் கொள்ளை குறித்து தனது வார்டு மக்களின் புகாரை பெற்று முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்களையும் கொடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் இது குறித்து  நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இந்த நிலையில் மணல் கொள்ளையர்களால் இவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவரின் மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பாலகிருஷ்ணனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விவசாயிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் செய்தி மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்