தென்னிந்தியாவிலேயே மஞ்சள் விவாசயத்திற்கும் விற்பனைக்கும் தலைநகராக இருப்பது ஈரோடு தான். இங்கிருந்து தமிழகம் முழுக்க மட்டுமில்லாது இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ஈரோடு மஞ்சள் விற்பனைக்குச் செல்கிறது. அப்படிப்பட்ட மஞ்சள் கரோனா தொற்றின் காரணமாகச் சென்ற ஒரு மாத காலத்திற்குப் பின் ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மஞ்சள் ஏலம் இன்று துவங்கியது.
இதை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் என நான்கு இடங்களில் ஏலம் நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் ஊராடங்கு உத்தரவின் காரணமாக மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் பெருந்துறை ஒழங்கு முறை விற்பனைக்கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய இரண்டு இடங்களில் ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று முதல் மஞ்சள் ஏலம் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஏலத்தைத் துவங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசும் போது, "இன்று முதல் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மஞ்சள் ஏலம் துவங்கியுள்ளது. இதில் கலந்துகொள்ளும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பெருந்துறை மஞ்சள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 24 டன் மஞ்சள் வரத்து விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மதிப்பு 18 லட்சம் ரூபாய் அதேபோன்று ஈரோடு மஞ்சள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு 30 டன் மஞ்சள் வரத்து உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்று முதல் தொடர்ந்து மஞ்சள் ஏலம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
தனியார் மஞ்சள் கிடங்கு உரிமையாளர் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், கரோனா தொற்றின் காரணமாக ஒரு மாதத்திற்குப் பிறகு துவங்கிய இந்த ஏலத்தில் 18 மஞ்சளை மாதிரிகளுக்கு வைத்திருந்தனர். இன்று முதல் ஊராடங்கு காலம் முடியும் வரை வெளி மாவட்ட, வெளி மாநில மஞ்சள் வியாபாரிகள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்றும் தற்பொழுது கிருமி நாசினி தேவை அதிகரித்துள்ளதால் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும். என்றார்.
ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் மஞ்சள் வியாபாரம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 கோடி வரை முடக்கம் ஏற்பட்டுள்ளது. இனி மஞ்சள் வியாபாரம் மெல்ல மெல்ல விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உயிர் சுவாசத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.