கடந்த ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய அப்பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி, நீதிபதிகள் நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். இது நீதித்துறைக்கும், நீதிபதிகளுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அரசு தலைமை வழக்கறிஞரிடம் விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு விளக்கமளித்த குருமூர்த்தி, “ஆண்டு விழா நிகழ்ச்சியில் வாசகர்கள் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில், ஊழல் வழக்குகள் விசாரணையில் தாமதம் ஏற்படுவது குறித்து பதிலளித்ததாகவும், நீதித்துறையைக் களங்கப்படுத்தும் உள்நோக்கம் இல்லை” எனவும் தெரிவித்திருந்தார். குருமூர்த்தியின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க இயலாது எனக் கூறி, வழக்கறிஞர் துரைசாமியின் விண்ணப்பத்தை நிராகரித்தார்.