சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது தனது வாகனத்தில் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.
அதே சமயம் டி.டி.எஃப். வாசனின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1இல் நீதிபதி இனியா கருணாகரன் முன்பு காணொளி வாயிலாக டி.டி.எஃப். வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டி.டி.எஃப். வாசனின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 16 ஆம் தேதி வரை நீட்டித்து மேலும் 15 நாட்களுக்கு டிடிஎஃப் வாசனை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையில் டி.டி.எப்.வாசன் ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் 2 முறை நிராகரித்திருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.எப். வாசன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நான் அப்பாவி. எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.