இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆயிரம் பெண்கள் திரண்டு உடைத்த டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயன்ற தகவல் அறிந்து பெண்கள், பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தை தொடங்கியதால் டாஸ்மாக் கடை திறக்கவில்லை என்று அதிகாரிகள் பின்வாங்கி சென்றுவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கடைவீதியில் கடந்த 2017 மே 20 ந் தேதிக்கு முன்பு வரை 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளால் பள்ளி சிறுவர்களும் மது போதைக்கு அடிமையாகும் அவல நிலை உருவானது. மேலும் மாணவிகள், பெண்கள், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக இருந்தது. பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டது என்பதால் மாதர் சங்கம் மற்றும் கிராம பெண்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர், வட்டாட்சியர், போலீசார் என அனைவருக்கும் புகார் கொடுத்தும் பலனில்லை. அதனால் 2017 மே 20 ந் தேதி கடைவீதியில் பந்தல் அமைத்து டாஸ்மாக் கடைகள் மூடும் வரை காத்திருக்கிறோம் என்று மாதர் சங்கம் இந்திராணி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் 2 ஆயிரம் பெண்கள் ஈடுபட்டனர். இளைஞர்கள், மாணவர்கள் துணையாக நின்றனர்.
இந்த தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் தொகுதி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் கடைகளை அகற்றிக் கொள்ள உறுதி அளித்தனர். அந்த உறுதிமொழியை எழுதிக் கொடுக்கச் சொல்லி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்கள் கேட்ட போது எழுதிக் கொடுக்காமல் வெளியேற முயன்றனர். எழுதிக் கொடுங்கள் என்று பெண்கள் அதிகாரிகள் காலில் விழுந்து அழுதனர். ஆனால் உதறிவிட்டு வெளியேற முயன்றனர். இந்த தகவல் போராட்டப் பந்தலில் இருந்த பெண்களுக்கு தெரியவர உடனே கிளம்பி வந்த பெண்கள் பேச்சுவார்த்தை நடந்த தனியார் திருமண மண்டபத்தை இழுத்து மூடி அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
அதன் பிறகும் அதிகாரிகள் கையெழுத்து போடாததால் வெகுண்டெழுந்த பெண்கள் கையில் கிடைத்த கல், கட்டை, போன்றவற்றுடன் ஊர்வலமாக சென்று 2 டாஸ்மாக் கடைகளையும் அடித்து உடைத்தனர். இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் தடுத்தும் தடையை உடைத்துக் கொண்டு சென்றனர். கடைகள் உடைக்கப்பட்ட பிறகு மாவட்ட நிர்வாகம் கொத்தமங்கலத்தில் 2 டாஸ்மாக் கடைகளையும் மூடுவதாக அறிவித்ததுடன் இனிமேல் ஊராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடைகள் திறப்பதில்லை என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு பெண்கள் களைந்து சென்றனர்.
அதன் பிறகு கடந்த ஆண்டு ஒரு முறை மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க முயற்சிகள் நடந்தது. அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தான் பெண்களால் உடைக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துள்ளது. நேற்று இரவு இதனை அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி, மாதர் சங்கம் இந்திராணி ஆகியோர் அதிகாரிகளிடம் இது பற்றி கேட்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது என்று பதில் சொன்னதால்.. அவசரமாக பெண்கள், இளைஞர்கள் கடைவீதியில் கூட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அழைப்புக் கொடுத்தனர். அதன் படி இன்று காலை ஏராளமான பெண்கள், இளைஞர்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன்.. டாஸ்மாக் கடை தற்போது திறக்கவில்லை. அதனால் களைந்து செல்லுங்கள் என்று உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அதே நேரத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று சிலர் முழக்கமிட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண்களை சிலர் தகாத வார்த்தையில் பேசியதாக ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி மற்றும் பெண்கள் புகார் கொடுத்தனர். டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பெண்கள் உடைத்த டாஸ்மாக் கடையை மீ்ண்டும் திறக்க வந்த அதிகாரிகள் பெண்கள் போராட்டத்தால் பின்வாங்கிச் சென்றது அதிகாரிகள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.