Skip to main content

திக்குமுக்காட வைக்கும் கொரோனா! திணறும் அமெரிக்கா!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020
u

 

மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவில் வேலை, குடியேற்றம் என்ற கனவில்லாத குடிமகனைத் தேடிக் கண்டுபிடிப்பது அரிது. இன்றைக்கு அந்தக் கனவுகளத்தனையையும் கிழித்து பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறது கொரோனா. 


சீனா, இத்தாலி நாடுகளுக்குப் பின்பே கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவைத் தாக்கியது. ஆனால் மிக விரைவிலேயே சீனாவையும் இத்தாலியையும் பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிக அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நாடுகளில் முதலிடத்தை எட்டிப்பிடித்துள்ளது அமெரிக்கா.

 

அமெரிக்காவில் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ எட்டிப்பிடித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பரில் கொரோனா தொற்றுக்குள்ளான சீனாவில் இதுவரை 81,285 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. பெருமளவில் உயிரிழப்புக்குள்ளான இத்தாலியில் 80,539 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை 1200 பேர் வரையிலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ள அமெரிக்காவில், வரும் நாட்களில் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

அமெரிக்காவில் கொரானோ நோய்த்தொற்றுதலுக்கு பெருமளவில் ஆளாகியுள்ள மாகாணமான நியூயார்க்கில், தீவிர சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ள கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவி வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. போதிய வென்டிலெட்டர் இல்லாத நிலையில், ஒரே வென்டிலேட்டரை இரண்டு பேருக்கு பயன்படுத்த முடியுமா என மருத்துவர்கள் சோதனை அடிப்படையில் முயற்சித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மற்றொரு மாகாணமான லூஸியானாவில் கொரோனாவின் தாண்டவம் தொடங்கியுள்ளது. தற்போதே வென்டிலேட்டர் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 80 சதவிகிதம் பேர் தற்போது வென்டிலேட்டர் உதவி தேவைப்படுபவர்களாக உள்ளதாகவும், கொரோனா தொற்று விகிதம் கட்டுப்படுத்தப் படாவிட்டால் வென்டிலேட்டரோடு, படுக்கை வசதிகளும் பற்றாக்குறையாகிவிடும்.

 

மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அங்கி, முகத்தை மூடும் மாஸ்க்குகளுக்கு தற்சமயம் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருவதாகவும் அம்மாநில கவர்னர் ஜான் பெல் கூறுகிறார். சில இடங்களில் பழைய மாஸ்க்கை சுத்தம்செய்து பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் வெளிப்படுத்துகின்றன.


நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை எதிர்பார்த்து நியூயார்க் தற்போதுள்ள 53,000 படுக்கைகளை 1,40,000 படுக்கைகளாக அதிகரிக்க மும்முரம் காட்டிவருகிறது அமெரிக்கா. திக்குமுக்காட வைக்கும் கொரானோவின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல் திணறிவருகிறது அமெரிக்கா.

 

சார்ந்த செய்திகள்