புது தில்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய செயலாளர் அப்துல் வாஹித் சேட் பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினார். ஃபாசிஸ சக்திகளும் அவர்களுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் ஊடகங்களில் ஒரு பிரிவினரும் இந்த தேசத்தில் வாழும் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை துன்புறுத்துவதையும் தவறாக சித்தரிப்பதையும் தடுக்க முன் வாருங்கள் என்று கலந்து கொண்டவர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார். தீவிரவாதம் அல்லது அது போன்ற குற்றச்சாட்டுகளோடு தொடர்புபடுத்தி பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ இழிவுபடுத்தும் இத்தகைய தாக்குதல்களால் பாப்புலர் ஃப்ரண்ட் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் தஃவா குழுக்களை இயக்குகிறது மற்றும் டாக்டர் ஹாதியாவுடைய மத மாற்றத்திற்கு பின்னால் பாப்புலர் ஃப்ரண்ட் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் NIAவுடைய ரகசிய ஆவணத்தை அணுகியதாக கூறிக்கொள்ளும் குரோதம் நிறைந்த சமீபத்திய ஊடக அறிக்கைகளை அவர் வன்மையாக கண்டித்தார். முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தின் மற்றொரு கற்பனையான லவ் ஜிஹாதை பாப்புலர் ஃப்ரண்ட் ஊக்குவிப்பதாக அந்த செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.
இதை தொடர்ந்து E.M அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற விவாதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜஃப்ருல் இஸ்லாம் கான், தில்லி சிறுபான்மையினர் கமிட்டியுடைய தலைவர் தஸ்னீம் கவ்சர், ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு தமது அனுபவங்களையும் இத்தகைய முயற்சிகளை எதிர் கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர். கார்பரேட் மயமாகிப்போன ஊடக நிறுவனங்கள் அறிக்கையில் இருக்கும் உண்மை நிலை குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் TRP போட்டியில் முந்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளதை விவாதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிகழச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் வடக்கு மண்டல தலைவர் A.S இஸ்மாயில், பாப்புலர் ஃப்ரண்ட் தில்லி மாநில தலைவர் பர்வேஸ் அஹமது, வழக்கறிஞர் முஹம்மது யூசுப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.