திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 20 ஆண்டு காலத்திற்கு மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்த கூடாது. 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி போடப்பட்ட தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறக்கூடாது. பல ஆண்டு காலமாக தரைக் கடை நடத்துபவர்களுக்கு அடையாள அட்டையை புதுப்பித்து உடனடியாக வழங்கிட வேண்டும். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தரைகடைச் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
முற்றுகைப் போராட்டம் முடிந்த உடன் அனைவரும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்க இருந்தனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த மேயர் அன்பழகன் தரைக்கடை வியாபாரிகளிடம் கோரிக்கை மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.