திருச்சி மாநகரம், கே.கே.நகர், மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைபிள் கிளப் கடந்த 31.12.2021 முதல் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் 24.07.2022-ந் தேதி முதல் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியானது, திருச்சி ரைபிள் கிளப்பில் முதல் முறையாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
24.07.2022-ந் தேதி முதல் 28.07.22-வரை நடந்த பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற்றவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு 28.07.2022-ந் தேதி பரிசுகள் வழங்கப்பட்டன. 29.07.22-ந் தேதி முதல் இன்று 31.07.22-வரை ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 31.07.22-ந் தேதி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் ஜாங்கிட், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இந்திய ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் சீத்தாராம ராவ், திருச்சி ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர்செல்வன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் இளமுருகன் மற்றும் கிளப்பின் தலைமை அதிகாரி சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், வெற்றிபெற்ற 192 நபர்களுக்கு தங்க பதக்கமும், 180 நபர்களுக்கு வெள்ளி பதக்கமும், 165 நபர்களுக்கு வெண்கலம் பதக்கமும், ஆகமொத்தம் 537 வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதில் சிறப்பம்சமாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், 0.22 ரைபிள் 50 மீட்டரிலும், 10 மீட்டர் ஏர் ரைபிளிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார். திருச்சி மாநகர காவல் ஆணையரை ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.