திருச்சி மாவட்டத்தில் நேற்று (22/06/2020) ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனோ பாதிப்பு ஏற்கனவே திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனரின் டிரைவருக்கு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து துணை கமிஷ்னருடன் செல்லும் அதிரடி படையினருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர்களில் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று காரணமாக கே.கே.நகரில் உள்ள காவலர் குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சி மாநகரின் 5- ஆவது வார்டு பாரதிநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கு போக்குவரத்து அலுவலகம் சஞ்சீவி நகரில் உள்ளது. அந்த அலுவலகத்திற்குக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து மோட்டர் வாகன ஆய்வாளர் ஒருவர் வந்து சென்று உள்ளார். அவர் மீண்டும் தஞ்சை சென்றவுடன் அவருக்குச் சோதனை செய்த போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட திருச்சி கிழக்கு போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் பீதி அடைந்து அங்குள்ள ஊழியர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். அதில் இரண்டு ஊழியர்களுக்கு கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும். அந்த அலுலகமே முடங்கிப் போனது. இதே போன்று ஒரு வழக்கு விசாரணைக்காக முசிறி காவல்நிலையத்திற்கு வெள்ளுர் பகுதியைச் சேர்ந்த சிலர் வந்தனர். விசாரணைக்கு வந்த ஒருவரின் மனைவிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முசிறி காவல்நிலையம் மூடப்பட்டு அங்கிருந்து காவலர்கள் அனைவரும் முசிறி திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இப்படி அதிரடியாக கரோனா பரவல் இருந்தாலும், திருச்சியில் மட்டும் இதுவரை 20,000- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்துள்ளது சுகாதாரத்துறை. அதில் 266 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 80- க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திருச்சி மாநகராட்சி சார்பில் 7 இடங்கள் கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும், முகாம்களுக்கு திருச்சியில் ஶ்ரீரங்கம் பி.எஸ். இந்து பள்ளி, தெற்கு பாண்டமங்களம் மாநகராட்சிப்பள்ளி, ஏர்போர்ட் காமராஜர் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி, காட்டூர் பாப்பாகுறிச்சி மாநகராட்சி பள்ளி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளிகள் உட்பட 7 இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.
'திருச்சியில் கரோனாவின் பரவல் புயல்வேகத்தில் பரவிக்கொண்டு இருப்பதால் திருச்சியில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பொன்முருகேஷன் கோரிக்கை வைத்துள்ளார்.