டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதில், சுமார் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
'விவசாயிகளின் விரோதி மோடி' என்கிற முழக்கத்துடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் தேசம் முழுவதும் டிச.26 முதல் ஜன.05 வரை தொடர் போராட்ட இயக்கம் நடைபெற்றது. அதனடிப்படையில் திருச்சி மாவட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக, கடந்த 10 நாட்களாக திருச்சி மாவட்டம் முழுவதும் கிட்டதட்ட 40 இடங்களுக்கு மேலாக, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களும், நோட்டிஸ் பிரச்சாரங்களும், போஸ்டர் பிரச்சாரமும் நடைபெற்றது. இந்தப் பிரச்சார இயக்கத்தின் இறுதி நிகழ்ச்சியாக, இன்று (05-01-2021) செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில், திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட இமாம் ஆர்.ஹஸ்ஸான் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பிச்சைகனி, மாவட்டப் பொதுச் செயலாளர் நியமதுல்லா, மாவட்டச் செயலாளர் முபாரக், மாவட்ட பொருளாளர் காதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் மஜீத், தளபதி அப்பாஸ், முகமது சுகைப், மீரான், ஜவஹர் அலி மற்றும் விவசாய அணித் தலைவர் சகாப்தீன், வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக், SDTU தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவர் முஸ்தபா, சுற்றுச்சுழல் துறை அணித் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கண்டன கோஷங்களை எழுப்பியவாறு, பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.