திருச்சி மாவட்டத்தில் இதுவரை 50 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியில் ஒருவருக்குப் புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாச்சிக்குறிச்சிச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பேக்கிரியைத் திறந்து வைத்ததாகவும், அதை சோமரசம்பேட்டை வி.ஏ.ஓ. மூட சொன்னதாகவும், அப்போது அங்கிருந்த திமுக விவசாயி தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் துரைபாண்டியன் (இவரது மனைவி சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர்) பேக்கரி திறக்க அனுமதி வாங்கிவிட்டேன் மூட முடியாது என வி.ஏ.ஓ. பிரேம் ஆனந்தை மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.
இது குறித்து நாம் துரைபாண்டியனிடம் பேசிய போது, கரோனா பிரச்சனை வந்ததிலிருந்து எங்க சோமரசம் பேட்டையில் தான் திருச்சியிலே முதல்முறையாக கிருமி நாசினியை டிரோன் மூலம் அடித்தோம். எங்கள் பகுதியில் தினக்கூலிகள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் ஏழ்மையில் உள்ள அனைவருக்கும் தினமும் உதவி செய்து வருகிறோம். அது என்னோட சொந்த பணத்தில் இருந்து செய்து வருகிறோம். தற்போது தடைசெய்யப்பட்ட பகுதியில் 1500 பேர் இருக்கிறார். அவர்களுக்குத் தினமும் பிரெட் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
உள்ளூரில் உள்ள அந்த பிரெட் கடையில் இருந்து கொடுக்கிறோம். அந்த பிரெட் கடைக்காரர் கடையை மூடிவிட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டிய பிரெட் பொருட்களை ஊராட்சி அலுவலகம் மூடியிருந்தால் அவர் கடையின் முன்பு அடிக்கி வைத்திருந்தார். அந்தக் கடையின் அருகே தான் காவல்நிலையம் உள்ளது. நாங்கள் பிரெட் கொடுப்பது, நிவாரண உதவி கொடுப்பது இவையெல்லாம் அரசாங்க அதிகாரிகள் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இதை எல்லாம் தெரிந்தே திட்டமிட்டு இவர் கடையைத் திறந்து வியாபாரம் செய்கிறார். நான் மிரட்டுகிறேன் என்று பழி வாங்கும் நோக்கத்தோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்கிறார்கள்.
இந்தக் காலங்களில் போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கும் நிலையில் எங்கள் மீது திட்டமிட்டு வழக்குப் பதிவு செய்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி அலுவலகத்தின் உள்ளே இருக்கும் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வேலையும் பெண் ஒருவர் நள்ளிரவு வரை வி.ஏ.ஓ. அலுவலகததில் தொடர்ந்து இருப்பதைப் பார்த்து நான் ஏன் பெண்ணை இரவு நேரங்களில் இங்கே தங்க வைக்கிறீர்கள் எனறு சத்தம் போட்டேன். அதை மனதில் வைத்து இப்படி என் மீது புகார் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.