திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவற்றில் ஓட்டை போட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தடயங்களை சேகரித்த போலீசார் வடமாநில கொள்ளையர்களின் செயல் என்று முதல் கட்டமாக விசாரணையில் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் 6 பேரை கைது செய்து விசாரணையும் நடந்தது. இந்த சம்பவங்கள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நிமிடத்திற்கு நிமிடம் பிரேக்கிங் நியூசானது.
இந்த நிலையில் தான் திருவாரூர் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் தப்பி ஓட முயன்ற போது மணிகண்டன் என்பவன் பிடிபட்டான். அவனிடம் இருந்த தங்க நகைகளையும் மீட்ட போலீசார் தப்பி ஓடிய சுரேஷை தேடினார்கள். ஆனால் அவன் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு தலைமறைவானான்.
அதன் பிறகே இது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில வங்கிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட முருகன் தலைமையிலான கும்பல் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் முருகன் தலைமறைவாகியுள்ளனர். அதை தொடர்ந்து அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையன் முருகன் வெளி மாநிலங்களில் கொள்ளையடித்த இடங்கள், கொள்ளையடித்த நகைகள், பணங்களின் மதிப்பு முழுமையும் தெரிந்த, அவனது கூட்டாளியான திருவாரூரில் வசிக்கும் மாஜி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் (தற்போது வேறு பிரிவில் இருப்பவர்) க்கு மட்டுமே, அவன் இருக்கும் இடம் தெரியும் என்றும், அவன் கொள்ளையடித்து கொடுத்த பங்கில் திருவாரூர் அருகில் உள்ள கிராமத்தில் வீடு, சென்னையில் வீடு, கிராமத்தில் விவசாய நிலம் உள்பட பல சொத்துகளை வாங்கி குவித்துள்ளதையும், பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கிடந்த காருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தி வருவது பற்றியும் ஜ ஜி வரை திருவாரூர் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த சப் இன்ஸ்பெக்டரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் முருகனை பிடிப்பதுடன் பழைய சம்பவங்களும் தெரிய வரும் என்றும் கூறியுள்ளனர். இந்த தகவல்களை சேகரித்த காவல் உயர் அதிகாரிகள், அந்த சப்- இன்ஸ்பெக்டரை விசாரணைக்கு கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர். அது பற்றி இன்று திருவாரூர் போலீசாரிடம் பேசியுள்ளனர். திருவாரூர் போலீசாரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த சப் இன்ஸ்பெக்டர் எப்போது விசாரணைக்கு போவார் என்று..