Skip to main content

மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் பலி; விஷம் வைக்கப்பட்டதா என போலீசார் விசாரணை!

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

trichy koothur nearest palur village cows incident

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் ஊராட்சியில் உள்ள பளூர் கிராமம் குடித் தெருவைச் சேர்ந்தவர்கள் 50 வயதான தங்கராஜ், 47 வயதான செந்தில் மற்றும் 48 வயதான சின்னதம்பி. இவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக கறவை பசு மாட்டை வைத்து பராமரித்து வருகின்றனர்.

 

நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சில பசு மாடுகள் வயல் பகுதிகளுக்குள் மேயச் சென்றது. வழக்கம் போல் வீட்டிற்குத் திரும்பி வரும் பசு மாடுகள் வரவில்லை. மாட்டின் உரிமையாளர்கள் பசு மாடுகளை இரவு வரை  தேடிவிட்டு வழக்கம் போல் வீட்டிற்கு வந்து விடும் என இருந்துள்ளனர். இந்நிலையில் காலையில் அப்பகுதியில் உள்ள  வயல் வேலைக்குச் சென்றவர்கள் வயல் காட்டில் 3 பசு மாடுகள் ஆங்காங்கே இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிராமத்தில் உள்ள மக்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

 

தகவல் அறிந்து மாட்டின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 3 பசு மாடுகள் வாயில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்தது கண்டு வேதனை அடைந்தனர். இந்த மாடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் உணவில் விஷம் கலந்து வைத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் மாடுகள் உயிரிழந்தது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

மேலும் கால்நடை மருத்துவர் தலைமையில் உடற்கூறு ஆய்வு செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். உடற்கூறு ஆய்வின் முடிவில் மாடுகள் எப்படி இருந்தது என தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். உயிரிழந்த கருவுற்ற பசு மாடுகள் ஒவ்வொன்றும் 50 ஆயிரத்துக்கு மேல் மதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பசு மாடுகள் கன்று ஈனும் தறுவாயில் இருந்துள்ளது. இதேபோல் வயலுக்கு மேயச் சென்ற மேலும் இரண்டு மாடுகளைக் காணவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காணாமல் போன இரண்டு பசு மாடுகளையும் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்