Skip to main content

ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து; ஒருவர் உடல் சிதறி பலி 

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

Trichy gas accident

 

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே பலூன் வியாபாரி வைத்திருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மேலும் ஒரு ஆட்டோவும், இருசக்கர மோட்டார் வாகனங்கள் மூன்றும், அருகில் இருந்த நகைக்கடையின் கண்ணாடிகளும் நொறுங்கி சேதமடைந்தன.

 

தெப்பக்குளம் தபால்நிலையம் அருகே நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. பண்டிகை காலம் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் இப்பகுதியில் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு சாலையோரம் தள்ளுவண்டி கடைகளும், இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டும் வியாபாரம் செய்பவர்கள் எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணப்படுவார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹீலியம் சிலிண்டரை ஏற்றி வந்த இருவர் பலூன் வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். 

 

அவர்கள் பலூனை ஊதுவதற்காக ஹீலியம் சிலிண்டரை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த சமையத்தில் அந்த ஹீலியம் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. அதில் சாலையில் நடந்து சென்ற ஒருவர் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயங்களோடு உயிர் தப்பினார்கள். அங்கு பயணிகளை  இறக்கிவிட வந்த நம்பர் பிளேட் பொறுத்தப்படாத புதிய ஆட்டோ உடைந்து நொறுக்கியது. ஆட்டோவை நிறுத்திவிட்டு வாடகை வாங்க சென்ற திருச்சி வரகனேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மன்சூர் காயமின்றி தப்பினார்.

 

மேலும், சிலிண்டர் வெடித்ததில் ஜவுளிக்கடைக்கு துணி எடுப்பதற்காக சென்ற கல்லூரி மாணவி, தனியார் நிறுவன பெண் ஊழியர், ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்ற தனியார் நிறுவன பொறியாளர் கவியரசு (24) ஆகிய மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்