நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில், “சமாஜ்வாதியும், காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். இதனால் குழந்தை ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். ராமர் கோயிலில் புல்டோசர் ஓட்டுவார்கள். யோகியிடம் இருந்து புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு இயக்கக்கூடாது எனக் கற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.
முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.