திருச்சியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லலிதா ஜீவல்லரி நகைக்கடை கொள்ளை நடைபெற்ற சம்பவத்தில், திரூவாரூர் முருகன் சம்மந்தப்பட்ட பின்பு, இதற்கு முன்பு நடந்த வங்கி நகைக்கொள்ளைகள் என அடுத்தடுத்து அத்தனை சம்பவங்களிலும் திவாரூர் முருகனின் கைவரிசை தொடர்ச்சியாக இருப்பதை கண்டறிந்த போலீஸார். அதன்பின் நகைக்கடை பிரச்சனை என்றாலே ரொம்ப உஷாராக விசாரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்கு சேலத்தை சேர்ந்த இரண்டு பேர் பெரிய பைகளுடன் வந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் உள்ளே செல்லும் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பையில் என்ன உள்ளது என பிரித்துக் காட்ட சொல்லி இருக்கிறார்கள்.
பையை பிரித்த போது அதில் 2000, 5000 என கட்டுக்கட்டாக பணத்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், என்ன இது என்று விரிவாக விசாரிக்க ஆரம்பித்தனர். பிடிபட்டவர்கள் சேலத்தில் இருந்து திருச்சிக்கு நகை வாங்க வந்ததாக கூறியிருக்கிறார்கள்.
அவர்களின் பேச்சில் சந்தேகமடைந்த போலீஸார் பணப்பையை உடனே கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீஸார், பணத்தை எண்ணி பார்த்ததில் அதில் ஒரு கோடியே 17 லட்சம் இருந்தது.
இந்தப் பணம் எங்கிருந்து வந்தது யாரிடம் கொடுக்க செல்கிறீர்கள் என போலீசார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர். பணம் வைத்திருப்பவர்கள் சேலத்தில் உள்ள நகைக்கடையில் வேலை பார்ப்பவர்கள் என்றும் திருச்சியில் நகை கடைக்கு பணம் கொடுத்துவிட்டு நகை வாங்க வந்ததாகவும் பில் காட்டினர்.
இருப்பினும் கோட்டை போலீஸாரின் சந்தேகம் தீர்ந்தபாடியில்லை. காரணம், சமீபத்தில் பெல் கூட்டுறவு வங்கியில் 1.50 கோடி ரொக்கம் கொள்ளை போனதும் இது குறித்து எந்த தடயமும் கிடைக்காமல் போலீஸார் விழிபிதுங்கி உள்ள நிலையில், கூட்டுறவு வங்கியில் மாயமான பணத்தில் உள்ள எண்களும் இந்தப் பணத்தில் உள்ள எண்களும் ஒரே எண்களாக உள்ளதா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோட்டை போலீஸார் லிமிட்டில் தான் லலிதா ஜீவல்லரி நகை கொள்ளை நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.